இந்தியாவின் டைட்டானிக் கப்பல்; ஒரேநேரத்தில் 700 மனித உயிர்களை பலி கொண்ட பரிதாபம்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாகத் கொண்டாடி வருகிறது. நாடு விடுதலை பெற்ற அதே 1947ம் ஆண்டு ராம்தாஸ் என்ற இந்தியக் கப்பலில் பயணித்த 700 பேர் மும்பை அருகே…

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாகத் கொண்டாடி வருகிறது. நாடு விடுதலை பெற்ற அதே 1947ம் ஆண்டு ராம்தாஸ் என்ற இந்தியக் கப்பலில் பயணித்த 700 பேர் மும்பை அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மிகப் பெரிய சோகம் நடைபெற்றும் 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டன என்பது நம்மில் பலரும் அறிந்திராத உண்மையாகும்.

வெள்ளையர் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இந்த வரலாற்றுச் சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பலான ‘ஆம்எம்எஸ் டைட்டானிக் கப்பல்’ தனது முதல் பயணத்தின்போதே கடலில் மூழ்கியது மனித குலம் மறக்க முடியாத மிகப் பெரிய துயர நிகழ்வாகும். 1912 ஆம் ஆண்டு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதில் அந்த கப்பல் மூன்று மணி நேரங்களில் முற்றாக மூழ்கியது. அதில் அதில் பயணம் செய்த ஆயிரத்து 503 பேரும் உயிரிழந்தது உலகின் மிகப் பெரிய கடல் அழிவாக கருதப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி ‘எஸ்.எஸ்.ராம்தாஸ்’ என்ற 406 டன்கள் கொண்ட அந்த இந்திய பயணிகள் கப்பலுக்கும் இதேகதிதான் ஏற்பட்டது என்பது வரலாற்றில் பெரிதாக பேசப்படாத உண்மையாகும். வார நாட்களில் மும்பைக்கும் கோவாவுக்கும் இடையே இயக்கப்பட்ட அந்த பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளில் மட்டும் மும்பைக்கும் ரேவாஸ் துறைமுகத்துக்கும் இடையே இயக்கப்பட்டது. துயரம் நடைபெற்ற நாளில் அந்த கப்பலில் எண்ணூறுக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர். கப்பல் புறப்பட்ட அரை மணி நேரத்திலேயே அவர்களில் பெரும்பாலோர் சாவைத் தழுவப் போகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

மும்பை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ராம்தாஸ் கப்பல் ஒன்றரை மணிநேரத்தில் ரேவாஸ் துறைமுகத்துக்கு சென்று சேர்வது வழக்கம். ஆனால் அன்று பல மணி நேரங்களாகியும் கப்பல் ரேவாஸ் சென்று சேராததால் அதனை இயக்கிய இந்திய ஸ்டீம் நேவிகேஷன் டிரேடிங் நிறுவன ஊழியர்களுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது. கப்பலுக்கு நேர்ந்த கதி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த காலத்தில் இதற்கான தொழில்நுட்ப வசதிகளும் பெரிய அளவில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் கவலையில் மூழ்கியிருந்த நேரத்தில் அந்த கப்பலில் பயணித்த 12 வயது சிறுவன் ஒருவன் மும்பைக்கு அருகே கடல் நீரில் உயிர்காக்கும் உடையில் மிதந்துக் கொண்டிருந்ததை படகில் ரோந்து சுற்றி வந்த கடலோரக் காவல்படையினர் பார்த்து மீட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அந்த சிறுவன் மூலமாகவே கப்பல் கடலில் மூழ்கிய துயரம் வெளிச்சத்துக்கு வந்தது. மும்பைக்கு அருகே ஏழரை கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோதுதான் கப்பலுக்கு சோதனை ஆரம்பமானது. அப்போது வெளுத்து வாங்கிய பெரு மழையிலும் சுழன்றடித்த புயலிலும் சிக்கி கப்பல் சின்னாபின்னமானது. போதாக் குறைக்கு ராட்சத அலைகள் கப்பலைத் தாக்கியதால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனால் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே கப்பல் கடலில் முற்றாக மூழ்கியது. இந்த உண்மைகள் அனைத்தும் பின்னர் தான் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் மீட்கப்பட்டதும் பயணிகளை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பயனளிக்கவில்லை. அப்போது பெய்த கனமழை மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரிய தடையாக அமைந்தது. இதனால் கப்பலில் பயணித்த பெரும்பாலான பயணிகள் சடலங்களாகவே கரை ஒதுங்கினார்கள். அவர்களது உடல்கள் மும்பைக்கு அருகே எலிபெண்டா தீவு மற்றும் புச்சர் தீவுகளில் கண்டெடுக்கப்பட்டன. கப்பலில் பயணம் செய்த 90 விழுக்காடு பேர் சாவைத் தழுவினர். அவர்கள் அனைவரும் கிர்காம் மற்றும் லால்பாக் பகுதிகளைச் சேர்ந்த மராத்தி மொழி பேசும் ஏழை எளிய நடுத்தர மக்கள் ஆவர்.

கப்பல் மூழ்கிய இடம் கரஞ்சா காசா என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் இறுதிவரை சேதமடைந்த கப்பலின் பாகங்களை மீட்கவே முடியவில்லை. கப்பல் கேப்டன் மற்றும் சில பணியாளர்கள் மட்டுமே உயிர்தப்பிய அதிர்ஷ்டசாலிகள். இந்தியாவின் இந்த மிகப் பெரிய கடல் துயரம் நடைபெற்ற இரண்டு மாதங்கள் கழித்தே விசாரணை நடத்தப்பட்டது. அனைத்துக் கப்பல்களிலும் ஒயர்லஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும், மழைக்காலங்களில் பயணிகள் கப்பல்களை இயக்கக் கூடாது என்ற சில ஆணைகளுடன் விசாரணை முடிந்தது. 700 பேர் கடலில் மூழ்கிய இந்த பேரழிவு நடைபெற்ற ஒரு மாதத்துக்குள்ளாகவே நாடு விடுதலை பெற்றதாலும், நாட்டுப் பிரிவினையில் ஆயிரக்கணக்கானோர் மாண்டதாலும் இந்த துயரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, கால ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்தே போனது. எனினும் மராத்திய தெருப்பாடகர்கள் சிலர் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகத்தை பாடல்களாகப் பாடி நினைவுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.