மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதல் தனியார் ரயில்
சேவை கோவையில் இருந்து துவங்கியது. இந்த ரயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
மத்திய அரசின் “தேகோ அப்னா தேஷ்” திட்டத்தில் ரயில் சேவையை தனியார் வசம்
கொடுப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வந்த சூழலில், பலதரப்பட்ட
விமர்சனங்களைக் கடந்து இந்தியாவின் முதல் ” பாரத் கவுர்” தனியார் ரயில் சேவை
கோவையில் இருந்து இன்று தொடங்கியது. கோவையிலல் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், சீரடி நோக்கி ஐந்து நாள் பயணமாக புறப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் பெங்களூரு மந்திராலயம் வழியே சீரடி சென்றடைகிறது. இன்று புறப்பட்ட சிறப்பு ரயிலில் ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். சாதாரண மற்றும் பேக்கேஜ் என இரு தரப்பட்ட கட்டண அடிப்படையில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 20 பெட்டிகள் கொண்ட ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு மத்திய
அரசு மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ரயிலை இயக்கும் லோகோ பைலட், வழித்தடங்கள், சிக்னல் போன்றவற்றை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். பயணிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், சேவை கட்டணம் வசதிகள் உள்ளிட்டவற்றை தனியார் நிறுவனம் பார்த்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக கொடுத்து ரயிலை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துள்ளனர். காலாண்டுக்கு தனியார் தரப்பில் முப்பத்தி எட்டு லட்ச ரூபாய் அரசிற்கு வருவாய் கிடைக்கும். ஆண்டுக்கு 3.07 கோடி ரூபாய் அரசுக்கு இதன் மூலம் வழங்கப்படுகிறது.
சீரடி வரை செல்லும் இந்த ரயில் முன்னதாக மந்தராலயத்தில் ஐந்து மணி நேரம்
நிற்கும் எனவும், அதன் பிறகே ஷீரடி சென்று ஒரு நாள் முழுவதும் அங்கு
நிறுத்தப்பட்டு பக்தர்களை அழைத்து வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகளுக்கு ஷீரடி சாய்பாபா கோவிலில் “சிறப்பு வி.ஐ.பி
தரிசனம்” , ஷீரடியில் அனைத்து பக்தர்களுக்கு இருவர் மற்றும் மூவர் தங்கும்
வகையிலான “ஏசி ” வசதியுடன் கூடிய அறைகள் வழங்கபடுவதோடு, பயணிகளுக்கான
விபத்துக் காப்பீடு பிரிமியம் இந்த நிறுவனத்தால் ஏற்கப்படுகிறது. ஷீரடி ரயில்
நிலையத்திலிருந்து ஸ்ரீ பாபா கோவில் செல்வதற்கு பேருந்து வசதி, பிரபல விமான
நிலையங்களில் பராமரிப்புப் பணி நிறுவனத்தின் மூலம் இச்சுற்றுலா ரயிலிலும்
“ஹவுஸ் கீப்பிங் ” எனும் சுகாதாரப் பராமரிப்பு பார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
குளிர் சாதன வசதி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்குத் தேவையான போர்வை,
தலையணை , விரிப்புகள் வழங்கப்படுவதோடு அவற்றை பக்தர்களே தங்கள் வசம்
எடுத்துச் செல்லலாம் எனவும், பயணத்தின்போது பயணிகள் களிப்புறும் வகையில்
கோவில்களின் சிறப்புகள், வழங்கப்படும் உணவுகள் குறித்து இனிமையாக ஒரு ரயிலில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும்,
அனைத்து நிகழ்வுகளையும், நெருக்கடிகளையும் கட்டுப்படுத்த விமானங்களில் உள்ளதுபோல் ஒரு ரயில் கேப்டன் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் சுகாதாரத்தைப் பேணிக்காக்க ஒரு சிறந்த மருத்துவர், இரயில்வே
பாதுகாப்பு காவல் பிரிவுடன் இணைந்த சிறந்த பாதுகாப்பு ஊழியர்களும்
பணியாற்றுவர். ரயில் பெட்டிகளை பராமரிக்க ஏ.சி. மெக்கானிக்குகள் உட்பட போதிய
பராமரிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ரயிலை நடிகரும் இயக்குநருமான சேரன் மற்றும் தொழிலதிபர்கள் மலர் தூவி வரவேற்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கபட்டாலும் பாதுகாப்பாக அச்சமின்றி ஷீரடி சென்று வரலாம் எனவும், அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதால் இந்த பயணம் புதிய
அனுபவத்தை தரும் என்கின்றனர் பயணிகள்.
-ம.பவித்ரா








