ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களை சுமந்துகொண்டு மேலும் ஒரு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில நாட்களாக கடும் போர் நடந்துவருகிறது. இதனால் உக்ரைனில் பயின்று வரும் மாணவர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் உயிருக்கு பயந்து தங்களது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வரிசையில் உக்ரைனில் வாழும் இந்தியர்களும் அடக்கம். போதுமான பாதுகாப்பு இல்லை என அங்குள்ள இந்திய மக்கள் குறிப்பிடுவதுடன், தங்களை காப்பாற்றுமாறு அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஹங்கேரியின் புடாபெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியர்களை சுமந்துகொண்டு மேலும் ஒரு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்த போர் நேரத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு ஆபிரேஷன் கங்கா என்று பெயரிட்டுள்ளது மத்திய அரசு. இதில் முதலாவதாக சனிக்கிழமை அன்று 219 இந்தியர்கள், ருமேனியாவிலிருந்து மும்பைக்கு அழைத்துவரப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 250 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மூன்றாவது முறையாக 240 இந்தியர்களை சுமந்துகொண்டு விமானம் இந்திவுக்கு புறப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செயசங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில், “போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி இந்தியர்கள் யாரும் எல்லைப்பகுதிகளை கடக்க முயல வேண்டாம் என உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறித்தியுள்ளது. அங்கு இருக்கும் இந்தியர்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ள நிலையில் அங்கிருக்கும் இருக்கும் அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.








