போரை நிறுத்த ரஷ்யாவை வலியுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 4 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேர் தங்கள் நாட்டை ஆக்கிரமித்து வருவதாகவும் குடியிருப்பு பகுதிகளை தாக்கி வருவதாகவும் கூறியதோடு அதை தடுத்து நிறுத்த அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உக்ரைனின் தற்போதைய சூழல், உயிரிழப்பு பெரும் கவலையளிப்பதாகக் கூறிய அவர், அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதற்காக இந்தியா தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். உக்ரைனில் உள்ள இந்தியர்களை விரைந்து வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா வரவேற்பு அளித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா வாக்கு அளிக்காமல் நடுநிலையாக இருந்த நிலைப்பாட்டை வரவேற்பதாகவும், இந்தியா உடனான சுமூகமான உறவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.








