தொழில் வர்த்தகத்திற்கும், நிதி பரிமாற்றத்திற்கும் பெரும்பாலான உலக நாடுகள் அமெரிக்காவின் பணமான டாலர், இங்கிலாந்தின் பவுண்ட் மற்றும் ஜப்பானின் யென் உள்ளிட்ட சில நாடுகளின் கரன்சிகளின் பணமதிப்பில் மேற்கொண்டு வருகின்றன. இதில் மிக அதிக அளவாக அமெரிக்காவின் டாலர் மதிப்பில் பணப் பரிமாற்றம் நடைபெறும்.
கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு கடும் சரிவுகளை சந்தித்து வரும் உலக நாடுகளின் பொருளாதாரம், மெதுவாக மீண்டெழுந்து வருகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வு, உற்பத்தி சரிவு என கடும் சிக்கல்களை பல்வேறு நாடுகள் சந்தித்து வருகின்றன. பொருளாதார மீட்சியின் ஒரு நடவடிக்கையாக அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு வட்டி விகிதம் 75 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்தது, ஆனால் மற்ற நாட்டு பணமதிப்பு கடுமையாக சரிவை சந்தித்தன. இதன் தாக்கம் இந்திய ரூபாயின் மதிப்பிலும் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.
நிலையான கச்சா எண்ணெய் விலை, ரஷ்யா -உக்ரைன் இடையிலான போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை, சீனாவில் தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை, உலக நாடுகளில் தொடரும் பொருளாதார சரிவுகளால் கடுமையான சவால்களை சந்தித்து வரும் இந்திய ஏற்றுமதி, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் வட்டி அதிகரிப்பால் மேலும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்த பணமதிப்பு சுழலில் இந்திய ரூபாயும் தப்பவில்லை. புதன்கிழமை அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 79 ரூபாய், 96 காசுகளாக இருந்தது. வியாழக்கிழமை வர்த்தக நேர நிறைவில் 93 காசுகள் குறைந்து 80 ரூபாய் ,89 காசுகளாக இருந்தது வராலாற்றில் அதிகபட்ச சரிவு என கூறப்பட்டது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இன்னும் ஒரு பேரிடியாக அமைந்தது. காலையில் 80 ரூபாய் 27 காசுகளில் தொடங்கி, வர்த்தக நேர முடிவில் 81 ரூபாய் 3 காசுகளில் நிறைவடைந்தது. இது டாலருக்கு இணையான இந்திய மதிப்பின் வரலாற்றில் இரண்டாவது உச்சபட்ச சரிவாக கூறப்படுகிறது
உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்தது. வர்த்தகத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை முதலீட்டாளர்கள் கடும் இழப்பை சந்தித்தனர். பங்குச்சந்தை வர்த்தகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது
தொடரும் ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிக்கும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அமெரிக்க டாலர் மதிப்பில் சம்பளம் பெறும் பணியாளர்களும் கனிசமான பலனை பெறுவார்கள். அதே நேரத்தில் மூலதனப் பொருட்கள், தங்கம், கச்சா எண்ணெய் இறக்குமதி போன்ற முக்கிய வர்த்தக செயல்பாடுகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் அனைத்து பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதுடன், உற்பத்தி துறைக்கும் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-ரா.தங்கபாண்டியன்







