செஸ் ஒலிம்பியாட் இந்திய மகளிர் A அணி வீராங்கனை ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஏ அணியில் விளையாடியவர் நிறைமாத கர்ப்பிணியான கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவள்ளி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணி பதக்கம் வெல்ல தனது அனுபவத்தைக் கொண்டு பெரும் பங்கு வகித்தார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று குழந்தை பிறக்க மருத்துவர்கள் தேதி குறித்திருந்த நிலையிலும், இந்திய அணிக்காக செஸ் ஒலிம்பியாட்டின் இறுதிச் சுற்றில் விளையாடினார் ஹரிகா துரோணவள்ளி.
ஹரிகா துரோணவள்ளிக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், ஒலிம்பியாட் அரங்கில் மருத்துவக் குழுவானது தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. விளையாட்டின்போது நாற்காலியில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் சிரமப்பட்டாலும் தனது அணியை வெற்றிப் பாதைக்கு நகர்த்தும் முனைப்பில் விளையாடிய ஹரிகா துரோணவள்ளிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பேராதரவு கூடியது.
போட்டியை பார்க்க வந்த பொதுமக்கள் சிலர், கர்ப்பிணிப் பெண் ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்க்க வந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில் ஹரிகா துரோணவள்ளிக்கு நேற்று இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது செஸ் வட்டாரம் மட்டுமில்லாமல் இந்தியர்களிடையேயும் பெரும் மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HarikaDronavali/status/1562506995248562178?t=rZtD1dCcevjyg5KgQjExbg&s=19
-ம.பவித்ரா








