பொருளாதாரத்தில் எதிரொலிக்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஜூலை 2ஆம் தேதி ரூ.100-ஐ எட்டி புதிய சாதனை படைத்து சாமானியர்களை வேதனைக்குள்ளாக்கியது. ஆட்டோ, கால் டாக்சி, லாரி ஓட்டுநர்கள் என பலரும் இதனால் அதிருப்தியில் இருந்த…

பெட்ரோல் மற்றும் டீசல் விலை, கடந்த ஜூலை 2ஆம் தேதி ரூ.100-ஐ எட்டி புதிய சாதனை படைத்து சாமானியர்களை வேதனைக்குள்ளாக்கியது. ஆட்டோ, கால் டாக்சி, லாரி ஓட்டுநர்கள் என பலரும் இதனால் அதிருப்தியில் இருந்த நிலையில், தற்போது இந்த விலையேற்றத்தினால், பொதுமக்களில் பலருக்கு மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுவதாக, ஆய்வு ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பெருவாரியான மக்கள் பெட்ரோல், டீசலுக்கு அதிகமாக செலவு செய்வதால், தங்களுக்கான அத்தியாவசிய செலவுகளை குறைத்துள்ளதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

உணவு பொருட்களுக்கான விலை, குறிப்பாக பால், முட்டை, பருப்பு வகைகளின் விலைவாசி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, சில்லறை வணிகத்தின் பணவீக்கம், மே மாதத்தில் 6.3 சதவீதத்திலிருந்து, ஜூன் மாதத்தில் 6.26 சதவீததிற்கு மிகவும் கணிசமான அளவாக குறைந்துள்ளது. இந்தாண்டு, எண்ணெய் தொடர்பான பொருட்களின் பணவீக்கம், மே முதல் ஜூன் மாதம் வரை, 30.9 சதவீதத்திலிருந்து 34.8 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும், இதனால், கச்சா பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் 45 சதவீதத்திலிருந்து 37.5 சதவீதமாகவும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என்கிறார் எஸ்பிஐ குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் செளமியா காந்தி கோஷ்.

மேலும், பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவற்றுக்கு, பொதுமக்கள் அதிக செலவு செய்வதால், தங்களுக்கான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த செலவுகளை குறைத்துள்ளனர் என்றும், இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுதொடர்பாக, மக்களுக்கு கொடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு செலவினங்களைப் பற்றி ஆராய்ந்த பாரத ஸ்டேட் வங்கி, சுகாதார மற்றும் உடல்நலம் தொடர்பான செலவுகளை, மக்கள் தொடர்ந்து குறைத்து வருவதால், மருத்துவ செலவுகள் அநாவசிய செலவுகளாக கருதப்படும் அபாயம் உள்ளது, என இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ செலவுகளைக் காட்டிலும், அன்றாடம் தேவைப்படும் மளிகை பொருட்கள் வாங்கும் அளவும் குறைந்து வருவதால், பெரும்பாலான பொருட்கள் விற்கப்படாமலும், தேவைகள் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணிகளே பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் தேவையை மேலும் அதிகரிக்கிறது என்று, வங்கியின் பொருளாதார அலோசகர் குறிப்பிடுகிறார்.

மேலும், வீட்டுக்கடன் கடந்தாண்டு 66 லட்சம் கோடியிலிருந்து, 73.6 லட்சம் கோடியாக இந்தாண்டு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பொதுமக்களின் வைப்புத்தொகை அளவானது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ​​2021-22 முதல் காலாண்டில் 38 சதவீதம் குறைந்துள்ளது எனவும், நிதி சேமிப்பு விகிதம், ஜனவரியில் 21 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்து, மூன்றாம் காலாண்டில் 8.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

கொரோனா காலத்தில் வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் பணம் என்பது தேவையான அளவிற்கும் கீழாகவே உள்ளது என்பதே நிதர்சனம்.

”இந்தியாவில் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மக்களிடம் பணம் இருந்தால் மட்டுமே வணிகம் பெருகும், அதன்மூலமே பொருளாதாரம் வளரும்” என பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையினால், மக்கள் தங்கள் செலவுகளை குறைத்துள்ளது நுகர்வோருக்கு மட்டுமல்லாது, வணிக வியாபாரிகளுக்குமே பேரிடியாக விழுகிறது.

தமிழ்நாடு அரசு வழங்கும் மாதம் ரூ.2000, தங்கள் வாழ்கையை மாற்றவில்லை என்றாலும், குறைந்தபட்சமாக அன்றாட வாழ்க்கையை நகர்த்த அது உதவுவதாக, தனியார் ஊடக நிறுவனம் ஒன்று தொலைபேசி வாயிலாக நடத்திய ஆய்வில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் விலைவாசியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், மக்கள் கையில் பணம் சென்று சேரும் வகையில், திட்டங்களை வகுத்தல் அவசியமாகிறது. ஊரடங்கினால் ஏற்பாடும் பொருளாதார இழப்பீட்டை பொறுத்தவரை, இந்தியாவில் தடுப்பூசி போடும் விகிதத்தை, ஒரு நாளைக்கு 70 லட்சம் என்ற கணக்கில் உயர்த்தினால், பதின்ம வயதினருக்கான தடுப்பூசி போடும் பணியை, 2022 ஆண்டுக்குள் முழுமையாகப் முடிக்கலாம் எனவும், இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.