1100 விமானங்களுக்கு ஆர்டர்…டேக் ஆஃப் ஆகும் இந்திய விமான போக்குவரத்து துறை….

இந்த டீல்  ஒரு மைல்கல் நிகழ்வு என்றும் இதன் மூலம் அமெரிக்காவின் 44 மாகாணங்களில் 10 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் மகிந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன்…

இந்த டீல்  ஒரு மைல்கல் நிகழ்வு என்றும் இதன் மூலம் அமெரிக்காவின் 44 மாகாணங்களில் 10 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் மகிந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் விமானப்போக்குவரத்துத்துறையின் வளர்ச்சிக்கு வானமே எல்லை என்று அந்த டீல் நிரூபித்திருப்பதாக நெகிழ்ந்திருக்கிறார் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்.  இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதை இந்த டீல் உணர்த்துகிறது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பெருமிதம் கொள்கிறார். இப்படி மூன்று நாட்டு தலைவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த அந்த டீல் என்ன?

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து  470 விமானங்களை வாங்குவதற்கு போட்டுள்ள ஒப்பந்தம்தான் இப்படி மூன்று நாட்டு தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 80 பில்லியன் டாலர் அதாவது இ்ந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு விமானங்கள் வாங்க கொடுக்கப்பட்ட இந்த ஆர்டர்தான் உலகின் மிகப்பெரிய விமான ஆர்டர் எனக் கருதப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசிடமிருந்து டாடா நிறுவனத்திற்கு விற்கப்பட்ட ஏர் இந்தியா,  17 ஆண்டுகளுக்கு பின் புதிதாக விமானங்களை அதிக அளவில் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த 470 விமானங்களில் பிரிட்டன் மாற்றும் பிரான்சில் இயங்கி வரும் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது ஏர் இந்தியா. ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியா கொடுத்துள்ள 250 விமானங்களில் 40 விமானங்கள் பெரிய அளவிலான A350 ரக விமானங்களாகும்.  18,000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய A350 ரக ஏர்பஸ் விமானங்களில் அதிகபட்சம் 480 பயணிகள் வரை பயணிக்கலாம்.

பெரும்பாலும் குறுகிய உடல் கட்டமைப்புக்கொண்ட சிறிய விமானங்களே இந்திய விமானப்போக்குவரத்துத்துறையில் இருந்து வரும் நிலையில் 40  A350 ரக விமானங்கள் புதிதாக வருவது இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு சர்வதேச அளவில் பெரும் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விமானங்கள் வாங்குவது ஏர் இந்தியா கொடுத்துள்ள ஆர்டரோடு நின்று போய்விடாது, இந்திய விமானப் போக்குவரத்துறையில் புதிதாக 1100 விமானங்கள் படிப்படியாக ஐக்கியமாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக விமான சேவை நிறுவனமான இண்டிகோ கொரோனா காலத்திற்கு முன்பே புதிதாக 300 விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பேரிடரால் விமான போக்குவரத்துறையில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 500 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான நிறுவனம் போயிங் நிறுவனத்திடமிருந்து 72 புதிய விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்த நிலையில் 16 விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் புதிதாக 72 விமானங்களை வாங்க உள்ளதாகவும் விஸ்டாரா நிறுவனம் 17 விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் விமானத்தில் உள்நாட்டுக்குள்ளும் வெளிநாட்டுகளுக்கும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டைவிட 2022ம் ஆண்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து 48.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார். இப்படி அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப தற்போது இந்தியாவில் உள்ள வர்த்தக விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது. உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் விமான போக்குவரத்து சந்தைகளில் ஒன்றான இந்திய விமான போக்குவரத்துத்துறை சந்தைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் புதிதாக 2210 விமானங்கள் தேவைப்படும் என உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கணித்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஆர்டர் கொடுக்கப்படும் 1100க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சேரும்போது இந்திய விமானப் போக்குவரத்துத்துறை புதிய உச்சம் தொடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.