ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை 4 ஆவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது இந்திய அணி. சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, பலம் வாய்ந்த மலேசியா அணியை எதிர்கொண்டது.
வழக்கத்திற்கு மாறான மக்கள் ஆதரவுடன் களமிறங்கிய இந்திய அணி, மலேசிய அணியுடன் போராடி முதல் கால் பாதியில் 1-1 என சமனில் இருந்தது. அதன் பிறகு தொடங்கிய இரண்டாவது கால் பாதியில் மலேசிய அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து 3-1 என இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
முதல் பாதியின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இருந்த இந்திய அணி, மூன்றாவது கால் பாதி ஆட்டத்தில் தீவிரம் காட்டியதை அடுத்து, இந்திய கேப்டன் ஹெர்மன் பிரித் சிங்கிற்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் அதனை இந்தியாவுக்கு இரண்டாவது கோலாக மாற்றினார். அந்த உற்சாகத்தை அனுபவித்து முடிப்பதற்கு முன்னதாகவே அதிரடியாக இந்திய அணி 3 ஆவது கோல் பதிவு செய்தது.
எனவே மூன்றாவது கால் பாதியின் முடிவில் 3-3 என இரு அணிகளும் சமனில் இருந்தன. ஆட்டத்தை தீர்மானிக்க செய்யும் நான்காவது கால்பாதியில் அதே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 ஆவது கோலை பதிவு செய்து இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை அபாரமாக வீழ்த்தியது.
பரிசளிப்பு விழா
இதன் மூலம் 4 ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தாயப் இக்ராம் உள்ளிட்டோர் கோப்பையையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கினர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி, வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், இந்திய அணியின் பயிற்சி குழுவினர்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. எனவே வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டார்.
தொடர்ச்சியாக மலேசிய அணி 2 ஆவது இடம் பிடித்ததை அடுத்து அமைச்சர் உதயநிதி வெள்ளிப் பதக்கமும், 3 ஆவது இடம் பிடித்த ஜப்பான் அணிக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா வெண்கலப் பதக்கமும் வழங்கினார்.
தொடரின் சிறப்பு விருதுகள்
தொடரின் சிறப்பு விருதுகள் பிரிவில் சிறந்த கோலுக்கான விருதினை இந்திய வீரர் கார்த்திக் செல்வம் பெற்றுக்கொண்டார். அதிக கோலுக்கான விருது 29 கோல்கள் பதிவு செய்த இந்திய அணிக்கும், அதிக கோல்கள் அடித்தவருக்கான விருது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிற்கும், தொடர் நாயகன் விருது இந்தியாவின் மந்தீப் சிங்கிற்கும் வழங்கப்பட்டது.







