உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம் சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நேற்றுமுன் தினம் தொடங்குவதாக இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பதால் ரசிகர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனால் இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். நிதானமாக ஆடிய இவர்களில் ரோகித் சர்மா 34 ரன்களிலும் சுப்மன் கில் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆகி ஏமாற்றமளித்தார். கேப்டன் விராத் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்போடு ஆட்டத்தைத் தொடங்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. விராத் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் விராத் கோலி (44 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வந்தார். அவரும் வந்த வேகத்தில் 4 ரன்களுடன் வெளியேற, ரஹானே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் விக்கெட்டை நீல் வாக்னர் வீழ்த்தினார்.ரஹானே 49 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த அஷ்வினை (22 ரன்கள்) டிம் சவுதி ஆட்டமிழக்க வைக்க, இந்திய அணி 7விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இஷாந்த் சர்மாவும் ரவீந்திர ஜடேஜாவும் ஆடி வருகின்றனர். 87 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.