இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன் னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பேட்டிங்கை தொடங்கிய கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும் கே.எல்.ராகுல் 129 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 42 ரன்களும் கடைசியில் அதிரடி காட்டிய ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 29 ஓவர்களில் 7 மெய்டனுடன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது அவருக்கு 31-வது முறை. ஆண்டர்சனின் வயது 39. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் (49 ரன்), விக்கெட்டை முகமது ஷமியும் டோம் சிப்லே (11ரன்), ஹசீப் ஹமீத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை முகமது சிராஜும் வீழ்த்தினர்.
இதையடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட்டும் (48 ரன்), பேர்ஸ்டோவும் (6 ரன்) களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.









