இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் 3 டி20 ஆட்டங்களில் விளையாடி முடித்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.
திருவனந்தபுரத்தில் கிரீன்ஃபீல்டு இன்டர்னேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 2வது டி20 ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற 3வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மல்லுக்கட்ட போகிறது.
அதன்படி முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. எனினும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.
எனினும், இந்தியாவுடனான டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா பறிகொடுத்தது. இதனால், ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தென் ஆப்பிரிக்கா விளையாடக் கூடும்.

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 வாரங்களுக்கு விளையாடமாட்டார். இந்திய அணியில் ரஜத் படிதார் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவர் விளையாடும் லெவன் அணியில் இருப்பாரா என்பது சந்தேகமே.
ஒரு நாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஷிகர் தவன் கேப்டனாக செயல்படவுள்ளார். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் களமிறங்குகிறார். ஸ்ரேயஸ் ஐயர், சுபமன் கில், இஷான் கிஷன், ஷர்துல் தாகுர், தீபக் சஹர், குல்தீப் யாதவ், ரவி பிஸ்ணோய், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மிஸ் செய்த டெம்பா பவுமா, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
குவின்டன் டி காக், ஜேன்மேன் மலன், எய்டன் மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், கேசவ் மகராஜ், லுங்கி கிடி, ககிசோ ரபடா, ஆன்டி பெலுக்வாயோ, மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.