வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு: யஷ்வந்த் சின்ஹா

குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் இம்மாதம் 24ம்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் இம்மாதம் 24ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை ஒட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இதனை அறிவித்துள்ளது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இருவரும் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

லீங

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வந்த யஷ்வந்த் சின்ஹா, அம்மாநில தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதற்கான கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்பட இங்கு கூடி இருப்பவர்களை விட சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என குறிப்பிட்டார். அவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் இல்லை என கூறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், தனது முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக காஷ்மீர் இருக்கும் என தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு வலியுறுத்துவேன் என்றார்.

காஷ்மீரில் அமைதி திரும்பவும், நீதி, ஜனநாயகம், இயல்புநிலை ஆகியவை மேம்படவும், தற்போதைய மோதல்கள் முடிவுக்கு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசை வலியுறுத்துவேன் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் மட்டுமே வாக்களிக்க முடியும். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இன்னும் தேர்தல் நடைபெறாததால், தற்போது எம்எல்ஏக்கள் யாரும் இல்லை. இந்த யூனியன் பிரதேசத்தில் 5 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 3 பேர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் இருவர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.