டெல்லி பாரத் மண்டபத்தில் நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்ற பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு (BRE Summit & Expo 2026) நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தித் துறை வளர்ச்சி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாகத் தெரிவித்தார். 135-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா நடத்திய மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மாநாட்டின் தொடக்க விழா நவம்பர் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் உலக நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றனர்.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். மேலும், 400-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், 627-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் 113 அமர்வுகள் இடம்பெற்றன. 32 வெளிநாட்டு அமைச்சர்கள், 6 மாநில முதலமைச்சர்கள், 10 மாநில எரிசக்தித் துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றது மாநாட்டின் சர்வதேச முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.19 லட்சம் கோடி முதலீடு தேவை!
இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை அடைவதற்கு சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 லட்சம் கோடி) முதலீடு தேவைப்படுவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஆண்டு மின்சாரப் பயன்பாட்டில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. சூரியசக்தி, காற்றாலை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன், மின்சாரச் சேமிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
யூனிட்டுக்கு ரூ.5.25-க்கு புதுப்பிக்கத்தக்க மின்சாரம்!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைத் தொடர்ந்து வழங்குவதற்கான Round-the-Clock Renewable Energy மற்றும் Firm and Dispatchable Renewable Energy (FDRE) திட்டங்கள் மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக, இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (SECI) சமீபத்திய ஒப்பந்தத்தில் யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.5.25 என நிர்ணயிக்கப்பட்டது சர்வதேசப் பிரதிநிதிகளின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேட்டரி சேமிப்பு, மின்சாரக் கட்டமைப்பு மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு மூலம் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியைக் கணித்தல் போன்ற தொழில்நுட்பங்களின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 200 மில்லியன் டாலர் சூரியசக்தி நிதி!
சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் (ISA) சார்பில் ஆப்பிரிக்க நாடுகளில் சூரியசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த 200 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், உலகம் முழுவதும் 10 லட்சம் சூரியசக்தி விவசாய மின்பம்புகளை நிறுவுவதற்கான இலக்கையும் ISA முன்னெடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து சர்வதேசச் சந்தைகளுக்குப் பசுமை எரிபொருட்களை வழங்குவதற்காக, நெதர்லாந்தின் Power2X நிறுவனத்துடன் இந்திய சூரிய எரிசக்திக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 லட்சம் டன் பசுமை மெத்தனால் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்பு!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்றன. சூரிய மின்கலங்கள், காற்றாலை உதிரிபாகங்கள், நீண்டகால மின்சாரச் சேமிப்பு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 37 ஆய்வு அறிக்கைகள், வழிகாட்டி நூல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வெளியிடப்பட்டன. மாநாட்டின் நிறைவில் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாடு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வளர்ச்சியை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதுடன், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முக்கிய தளமாக அமைந்ததாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.




