இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப இருப்பதாக வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
அதன்பிறகும் பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படாததால் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கடந்த 9ம் தேதி தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.
அதிபர் கோத்தபய ராஜபக்சவின் இல்லம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதிபர், பிரதமர் மாளிகைகள் ஆக்கிரமிப்பு:
இதனையடுத்து, அதிபர் மாளிகைக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் அதனை ஆக்கிரமித்தனர்.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் டெம்பிள் ட்ரீ என்ற மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைகளை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன.
உலா வரும் செய்திகள்:
இந்நிலையில், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்த இந்திய அரசு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்திய தூதரகம் விளக்கம்:
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பொருந்தக்கூடியவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது என்றும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, ஜனநாயக முறைப்படியும் விழுமியங்களின் அடிப்படையிலும் தங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஆதரிக்கிறது என்றும் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதை இலங்கைக்கான இந்திய தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் இந்த அறிவிப்பு இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறது.