ரோஹித் புதிய சாதனை – இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. இந்தியா- இங்கிலாந்து இடையே டி,20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது…

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

இந்தியா- இங்கிலாந்து இடையே டி,20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இங்காலந்தின் பிர்மிங்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாத்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், டி20 உலக கோப்பை நெருங்குவதால் இந்திய அணி எக்கச்சக்க மாற்றங்களுடன் களம் இறங்கியது. கோலி, பும்ரா, பன்ட், ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பினர். கேப்டன் ரோஹித் சர்மாவுமன் பன்ட் ஓப்பனிங் இறங்கினார். இருவரும் ஆரம்பத்தில் சற்று அதிரடியாக ஆடினாலும், மறுபக்கம் விக்கெட்களும் சீரான இடைவெளியில் விழுந்து இந்திய அணியை தடுமாற செய்தது.

இறுதியில் ஜடேஜா சற்று அதிரடி காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. பவர் பிளேவில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். அவருடன் பும்ரா, சஹால் உள்ளிட்டோரும் சிறப்பாக வீச இங்கிலாந்து அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும், இந்திய அணி வென்றது. 3 விக்கெட்களை கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச அளவில், பவர் பிளேவில் அதிக டாட் வீசிய பட்டியலில் (500) புவனேஷ்வர் முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 4 தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கேப்டனாக டி20 போட்டியில், தொடர்ச்சியாக 14 வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். அனைத்துவிதமான தொடர்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) கேப்டனாக ரோஹித் தொடர்ச்சியாக பெறும் 16வது வெற்றி இது. முக்கியமாக சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றி சதவீதத்துடன் 86.7 (30 போட்டிகளில் 26 வெற்றி) ரோஹித் முதல் இடத்தில் உள்ளார்.

சர்ப்ரைஸாக நேற்றைய போட்டியை இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி நேரில் சென்று பார்த்தார். போட்டி முடிந்ததும், அவர் இந்திய வீரர்களிடம் உரையாடினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.