கொளுத்தப்பட்ட பிரதமர் வீடு…இலங்கையில் உச்சக்கட்டத்தில் மக்கள் கிளர்ச்சி…

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான…

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை மிகத் தீவிரமடைந்துள்ளதால் பெட்ரோல், உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட பலவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. நாடு திவாலாகி விட்டது போன்ற சூழல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறும் அளவிற்கு அங்கு பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் அத்யாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அவதிப்படும் இலங்கை மக்கள் மீண்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி இலங்கை தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த லட்சக்கணக்கான மக்கள் இலங்கை அதிபரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மக்கள் எழுச்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சில ராணுவ அதிகாரிகளும், போலீசாரும்கூட தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போராட்டக்களத்தில் கைகோர்த்தனர். தடுப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு அதிபர் மாளிகைக்குள்ளும் ஏராளமானோர் புகுந்து கோத்தய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையைவிட்டு ரகசியமாக வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது மர்மமாகலே உள்ளது. இந்நிலையில் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள போராட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவின் வீட்டின் முன்பு குவிந்தும் அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரத்தில் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மக்கள் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை உணர்ந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இலங்கையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய அரசு பொறுப்பேற்பதற்கு வசதியாக தாம் பதவி விலகப்போவதாக ரணில் விக்ரமசிங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.