மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக தமிழ்நாட்டின் மரபுக்கேற்ப மாநில கல்விக்கொள்கை ஒன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக குழு அமைப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
குழுவின் தலைவர்: நீதியரசர் முருகேசன்
உறுப்பினர்கள்:
- பேராசிரியர்கள் ஜவஹர்நேசன்
- இராமானுஜம்
- சுல்தான் இஸ்மாயில்
- இராம சீனுவாசன்
- முனைவர் அருணா ரத்னம்
- எழுத்தாளர் இராமகிருஷ்ணன்
- செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
- இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா
- கல்வியாளர் துளசிதாசன்
- கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு
- அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோளுக்கு ஏற்ப மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கையை வகுக்க மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என்று பலதரப்பட்டோரிடம் கருத்துக்களை பெற வேண்டும் என்றும்,
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு
கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். சமத்துவமான கல்வியை தரும் வகையில் கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரும் வகையிலும், பள்ளிப் படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்க் கல்வியை தொடரும் வகையில் கல்விக் கொள்கை அமைய வேண்டும்
என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்தில் கல்விக் கொள்கையை வடிமைத்து அதை அரசிடம் சமர்ப்பிக்க
வேண்டும் என்றும் தேவைப்பட்டால் துணைக் குழுவை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும்
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








