இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டு சென்றார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக சுமார் 26 கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற ஓரணியில் திரண்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும், நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆலோசனையின் போது, இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மும்பை செல்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.







