78வது சுதந்திர தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 78- வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்;
- குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம். பொங்கல் முதல் செயல்படவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
- முன்னாள் படைவீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம். இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும்.
- விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு.
- வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள் பெற்று வரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியம் 10,500 ஆக உயர்வு.
- ஜனவரி 2026-க்குள் 75000க்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.
- காஞ்சிபுரம் கொடுங்கையூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி திட்டமதிப்பில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா.
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏலகிரி, ஏற்காடு மலைப்பகுதிகளில் பெருமழைக் காலங்களில் ஏற்படக் கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.







