வார விடுமுறை மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 1100 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக லட்சக்கணக்கானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பண்டிகை கால விடுமுறையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில், சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறையை தொடர்ந்து சில தனியார் நிறுவனங்கள் திங்கள்கிழமையும் விடுமுறை அளித்துள்ளன. இது மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுவோர் திங்கள்கிழமை விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்து துறை .
ஆகஸ்ட் 11, 12, 13, 15 ஆகிய நாள்களில் மொத்தம் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், இதனால் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க முன்கூட்டியே முன்பதிவு செய்யவும் போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.







