சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த வெளி மாநில சுற்றுலா பயணிகள், அங்கு அமைந்துள்ள புல்வெளி மைதானங்களை கண்டு ரசித்து விடுமுறை நாளை கொண்டாடி மகிந்தனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உதகைக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், சுதந்திர தின விடுமுறை காரணமாக இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதில் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தாலியன் பூங்கா, புல் மைதானங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உதகையில் நிலவும் இதமான காலநிலையில் இயற்கை அழகை கண்டு ரசித்தும், செல்ஃபி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். அதே போல் குழந்தைகள் புல் மைதானங்களில் ஆனந்தமாய் விளையாடி விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








