அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் சமீபத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 95.03 % மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாவட்ட வாரியாக அரியலூர் 98.32%-த்துடன் முதல் இடம் பெற்றது.

இந்த தேர்வு முடிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. முன்னதாக 2021-22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2024-25ல் 96% ஆக உயர்ந்தது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-22ல், 78% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2023-24ல் 92% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்“

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.