மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 2,406 கனஅடியில் இருந்து 2,862 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து கடந்தாண்டு முன்கூட்டியே மே 24ஆம் தேதி அணை திறக்கப்பட் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
முதல் நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இந்த அளவு டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 13ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தாமதாக தொடங்கிய நிலையில், ஜூலை மாத இறுதியில் தான் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டது. ஆனால் மழை குறைந்து விட்ட நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் குறைந்து விட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. அதன்படி நீர்வரத்து வினாடிக்கு 2,406 கனஅடியில் இருந்து 2,862 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கனஅடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் நீர் இருப்பு 23.17 டி.எம்.சி.யாக உள்ளது.







