கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டம் கொண்டுவர அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசர சட்டத்தை வெளியிடுவதற்கு கர்நாடக அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சரவை கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முறையான ஒப்புதலை வழங்கியது.
இந்நிலையில் நேற்று, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்திற்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் கர்நாடகத்தில் மொத்த இடஒதுக்கீடு 56 சதவிகிதமாக உயர்கிறது. மேலும் இந்த இடஒதுக்கீடு உயர்வை அரசியலமைப்பின் 9 வது அட்டவணையின் கீழ் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், இதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவிகிதத்தில் இருந்து 17 சதவிகிதமாகவும், 33 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்துவதற்கான அவசர சட்டத்துக்கு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, அவர்களின் வாழ்வில் ஒளியையும் பிரகாசத்தையும் கொண்டு வருவதோடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதுமான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களை உயர்த்தும்” என்று தெரிவித்துள்ளார்.







