முக்கியச் செய்திகள் தமிழகம்

காலை 9 மணிக்கு தீர்ப்பு…9.15மணிக்கு பொதுக்குழு?…ஜூலை 11ல் அதிமுகவில் நடக்கபோவது என்ன?

ஜூலை 11ந்தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான இன்றைய விவாதத்திலும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் அனல் பறந்தது. இந்த வழக்கு தீர்ப்புக்காக வரும் திங்கட் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, 

அதிமுக உட்கட்சி மோதலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் ஜூலை 11ந்தேதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டப்படி பொதுக்குழு நடைபெறுமா, அவ்வாறு நடைபெற்றால் கூட்டத்தில் அதிமுகவின் புதிய அத்யாயம் எழுதப்படுமா என்கிற கேள்விகள் தமிழ்நாடு அரசியலில் அனலைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பு இடையே நடைபெறும் சட்டப்போரட்டத்தின் முக்கியகட்டமாக  ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உள்ளது.  ஜூலை 11ந்தேதி பொதுக் குழுவுக்கு தடைவிதிக்கக்கோரி எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ,.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்ற நீதிபதி நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு இபிஎஸ் தரப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டது.

பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறிய இபிஎஸ் தரப்பு, எனினும் அந்த இரு பதவிகளும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் 23 தீர்மானங்களும் கடந்த ஜூன் 23ந்தேதி பொதுக் குழுவில் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து   ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. மேலும் இந்த சூழலில் கட்சியில் வெற்றிடம் ஏற்படாது, அந்த இடத்தை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் நிரப்புவார்கள் என அதிமுக சட்டவிதிகள் கூறுவதாகவும்  இபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட தலைமை கழக செயலாளர்கள் (74 பேர் உள்ளனர்) சேர்ந்து, காலியாக உள்ள இடம் நிரப்பப்படும் வரை செயல்படுவார்கள் என்றும் இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.  கடந்த 2016 ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் பொதுக் குழுக் கூட்டப்பட்டு சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுதாரணம் இருப்பதாகவும் இபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. சசிகலா சிறை சென்ற பிறகு 2017ம் ஆண்டு அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டபோதும் தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இபிஎஸ் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

பொதுக் குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்கிற ஓபிஎஸ் தரப்பின் வாதத்தை நிராகரித்த இபிஎஸ் வழக்கறிஞர்., அதிமுக கட்சி விதிகளின்படி சாதாராண பொதுக்குழுவுக்கு மட்டுமே அந்த விதி பொருந்தும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கினர் வேண்டுகோளை ஏற்று கூட்டப்படும் சிறப்பு பொதுக்குழுவிற்கு அந்தவிதி பொருந்ததாது என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவிலேயே ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது, பொரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றே ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவெடுக்கப்பட்டது என வாதங்களை எடுத்துரைத்து பொதுக்குழு குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்ற ஓபிஎஸ் தரப்பின் குற்றச்சாட்டை இபிஎஸ் தரப்பு மறுத்தது.

அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களின் நீதிமன்றம் தலைமையிட முடியாது என்றும் தனது வாதமும்  இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது.  ஜூலை 11 பொதுக்குழுவை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டிய இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என வாதிட்டது. தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும் பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது.எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம்.அதனை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் அடுக்கடுக்கான விவாதங்கங்கள் முன்வைக்கப்பட்டன. பல உண்மைகளை மறைத்து ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவர் பொதுக்குழு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை, 64 எம்.எல்.ஏ.க்கள் பொதுக்குழுவுவை கூட்டுவதற்கு  ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர் என அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.  விசாரணை தொடங்கியதிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தனது வாதத்தை தொடங்கியபோது பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதாக கூறுவது தவறு என இபிஎஸ் தரப்பு வாதத்தை மறுத்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உத்தரவின் அடிப்படையில் தான் உட்கட்சி தேர்தல் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றதாகவும் ஓபிஎஸ்உ தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக உட்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அமலுக்கு வந்துவிட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை எனக் கூறிய ஓபிஎஸ் தரப்பு,  கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்படாத நிலையில், எப்படி பதவிகள் காலியாகும் எனவும் கேள்வி எழுப்பியது.

தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் அவர்கள் வகித்த பதவிகள் காலி என கருத முடியும் எனக் கூறிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதிமுக வை பொறுத்தவரை கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்தபோதும்,  2016 ல் ஜெயலலிதா இறந்தபோதும்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் கூட்ட வேண்டும் என்றும் கட்சியின் நலனுக்காகவே ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பில்  வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் அனல் பறக்கும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து தீர்ப்புக்காக வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒத்திவைத்தார். அன்றுதான் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். காலை 9.15 மணிக்கு பொதுக் குழு தொடங்கும் நேரம் என திட்டமிடப்பட உள்ள நிலையில் 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது. இதனால் ஜூலை 11ந்தேதி காலை பொழுது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பிற்கும் திக் திக் நிமிடங்களாக கடக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட விழாவில் காதலை சொன்ன ’வலிமை’ வில்லன்

Halley Karthik

லண்டன் வரை ஒலித்த ‘வலிமை’ அப்டேட்!

EZHILARASAN D

சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar