லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஜூலை 12-ம் தேதி வரை கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில், கோவையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள், ராம் அரவிந்த் 18 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அருண் கார்த்திக் ,ஸ்ரீ நெரஞ்சன் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த அஜிதேஷ் குருசாமி ஒரு புறம் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இதையடுத்து சோனு யாதவ் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் அருண் குமார் களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய அஜிதேஷ் சதம் அடித்து அசத்தினார். 112 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.







