இபிஎஸ் உள்ளிட்டோர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…

அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் விதமாக 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விட குறைவான அளவில் முறைகேடாக கட்டிடம் கட்டியதில் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், முறைகேடு மற்றும் ஊழல் புகார் தொடர்பாக 2021 ஜூலை மாதம் தமிழக அரசின் ஊழல் கண்காணிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை எனவும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வி.சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதரார் புகாரில் ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது எனவும், மேல் விசாரணை தொடர்பாக உரிய அனுமதி வேண்டி ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்.

இதையடுத்து நீதிபதி சிவஞானம் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.