தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைப்பூசத்திருவிழா. இந்த விழா தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் தைப்பூசத் திருவிழா நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது போல, தமிழகத்திலும் பொது விடுமுறையாக அறிவிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தைப்பூசத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், தமிழகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு, ஜனவரி 28ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா தினத்தை பொது விடுமுறை நாள் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.







