புதுச்சேரி மின் துறையை தனியார்மயமாக்க அரசு டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து
மாநிலம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க
நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுச்சேரி மின்துறை
பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை
உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில் மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் கோரப்பட்டு அரசு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு
ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விநியோகத்தில் நூறு சதவீத
பங்குகளை வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் முன்மொழிவுக்கான
கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்தவேண்டும். வங்கி
செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்கவேண்டும். முன்மொழிவுக்கான கோரிக்கை வரும்
30ம் தேதி தொடங்கும் என்றும் இதற்கு விண்ணப்பிக்க வரும் நவம்பர் 25ம் தேதி
இறுதி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த புதுச்சேரியில் பணிபுரியும் மின்துறை பொறியாளர்கள்,
அலுவலக ஊழியர்கள், மின் கட்டண வசூலிப்பவர்கள், மின்சார பராமரிப்பு ஊழியர்கள்
என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டு வருவதால் மின் சேவைகள் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின் துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த
வலியுறுத்தி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் அனைவரும்
வாயிலில் நின்று அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.







