ரூ. 45 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்த கார்த்திக்கேயன் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் சாலையோர காய்கறி கடையில் தொடர்ந்து 4 நாட்களாக அடையாளம் தெரியாத ஒருவர் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளார். இதனை கண்டுபிடித்த கடை உரிமையாளர், ஊழியர்கள் மூலம் கள்ளநோட்டை கொண்டு வருபவரை கையும் களவுமாக பிடிக்க கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி ஆகஸ்டு 17 ஆம் தேதி அதே நபர் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் காய்கறியை வாங்கிய போது கடை ஊழியர்கள் சாதுர்யமாக பிடித்தனர். பிறகு அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பள்ளிக்கரணையை சேர்ந்த 64 வயது முதியவரான முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட கொடுத்து அனுப்பிய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவரான வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைதொடர்ந்து திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையிலான தனிப்படை போலீசார் கைதான சுப்பிரமணியன் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 45 லட்சத்து 20 ஆயிரம் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள். அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ளநோட்டுகள் விளம்பர படம் ஒன்றிற்காக தயார் செய்து வைத்திருந்ததாகவும், கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்பவர் தலைமறைவாகி விட்டதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்த கார்த்திக்கேயன் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இவரின் பிரிண்டிங் பிரஸில் வைத்து கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைதான கார்த்திகேயன் சென்னை கேகே நகரில் வசித்து வருகிறார். கைதான 2 பேர் தொடர்பு குறித்து கார்த்திகேயனிடம் நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.