21ம் நூற்றாண்டில் உலகளாவிய வளர்ச்சி தென்நாடுகளில் இருந்து வரும்- பிரதமர் மோடி

21ம் நூற்றாண்டின் உலகளாவிய வளர்ச்சி என்பது தென்பகுதி நாடுகளில் இருந்து வரும் என பிரதமர் மோடி சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாடு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக…

21ம் நூற்றாண்டின் உலகளாவிய வளர்ச்சி என்பது தென்பகுதி நாடுகளில் இருந்து வரும் என பிரதமர் மோடி சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாடு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் பின்தங்கின. இந்தநிலையில், சர்வதேச அளவில் தென்பகுதியில் அமைந்த நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதன்படி, சர்வதேச தெற்கு குரலுக்கான உச்சிமாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே இன்று பேசி வருகிறார். இந்த மாநாட்டில் வளர்ந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என 120 நாடுகள் கலந்து கொள்கின்றன.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, போர், மோதல், பயங்கரவாதம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள், உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற கடினமான ஆண்டை நாம் கடந்து வந்துள்ளோம். உலகளாவிய சவால்களில் பெரும்பாலானவை சர்வதேச தென்பகுதி நாடுகளில் உருவாக்கப்படவில்லை. ஆனால் அவை நம்மை அதிகம் பாதித்தன.

21ம் நூற்றாண்டில், உலகளாவிய வளர்ச்சி தென்பகுதி நாடுகளில் இருந்து வரும். தென் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் காணப்படுகிறது. மனிதஇனத்தின் 4-ல் 3 பங்கு மக்கள் நமது நாடுகளிலேயே வசித்து வருகின்றனர்.

அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் ஆதரித்தோம், நமது குடிமக்களின் நலனை உறுதிசெய்யும் புதிய உலக ஒழுங்கை உருவாக்க இந்த நூற்றாண்டில் அதை மீண்டும் செய்யலாம். உங்கள் குரல் இந்தியாவின் குரல், உங்களின் முன்னுரிமைகள் இந்தியாவின் முன்னுரிமைகள் என பிரதமர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.