வெளியுறவுக்கொள்கை: இந்தியாவோடு பாகிஸ்தானை ஒப்பிட்ட இம்ரான்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனம் கொண்டது என்றும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனம் கொண்டது என்றும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

அப்போது, “இந்தியா சுதந்திரம் பெற்ற போதுதான் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானதாக இருக்கிறது; ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனத்துடன் இருக்கிறது” என அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா கூறியபோது, “அதைச் சொல்ல நீங்கள் யார்? ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகின்றன. எங்கள் மக்களுக்கு கச்சா எண்ணெய் தேவை. நாங்கள் அவற்றை வாங்குவோம்” என நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.

இந்த வீடியோவை இம்ரான் கான் மிகப் பெரிய திரை மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு போட்டுக் காண்பித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தான் பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட முயற்சியை சுட்டிக்காட்டிய இம்ரான் கான், ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அமெரிக்காவின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நடவடிக்கையை கிடப்பில் போட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

ஸ்லோவேகியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசிய பேச்சை ஏற்கனவே தனது பொதுக்கூட்ட உரைகளில் சுட்டிக்காட்டிய இம்ரான் கான் இம்முறை, வீடியோவையே திரையில் போட்டுக் காண்பித்து பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • பால. மோகன்தாஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.