பாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் டிஎஸ்பியாக மணிஷா ரோபெடா பொறுப்பேற்றுள்ளார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அங்கு ஹிந்துக்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வருவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில் 26 வயது இளம் ஹிந்து பெண்ணான மணிஷா ரோபெடா அந்நாட்டின் முதல் ஹிந்து பெண் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார்.
பாகிஸ்தான் பொதுவாக ஆணாதிக்க நாடு என்ற பெயர் பெற்றது. அங்கு இஸ்லாமிய பெண்கள்கூட முக்கிய பொறுப்புகளுக்கு வருவது மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், சிறுபான்மை ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரான மணிஷா ரோபெடா டிஎஸ்பியாக பொறுப்பேற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சிந்து மாகாணத்தின் ஜாகோபபாத் பகுதியில் வசிக்கும் நடுத்தர வருமாணம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவரான மணிஷா ரோபெடாவிற்கு சிறு வயது முதல் போதிக்கப்பட்ட ஒரு விஷயம், பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் மருத்துவர்களாகவோ ஆசிரியர்களாகவோ மட்டும்தான் வரவேண்டும் என்பது. இவரது 3 சகோதரிகளும்கூட மருத்துவர்களாகத்தான் பணியாற்றி வருகிறார்கள். இவரது தம்பியும் தற்போது மருத்துவம் படித்து வருகிறார்.
மணிஷா ரோபெடாவும் மருத்துவம் படிக்கவே முயன்றுள்ளார். எனினும், நுழைவுத் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்துவிடவே அவர் தேர்ச்சி பெறவில்லை.
இதையடுத்து, சவால் நிறைந்த காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற உந்துதலைப் பெற்றதாகக் கூறும் மணிஷா ரோபெடா, பொதுவாக நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையோடு தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் எனும் கருத்து தங்கள் சமூகத்தில் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை உடைத்து பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும், காவல்துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் தான் விரும்புவதாக மணிஷா ரோபெடா தெரிவித்துள்ளார்.









