தமிழ்நாட்டின் தலைநகரம் கொலை, கொள்ளை நகரமாக மாறி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கோயம்பேடு அண்ணா அனைத்து மார்க்கெட் பொது நலச் சங்கத்தின் தலைவர் பழக்கடை ஜெயராமன் தலைமையில் சுதந்திர தின விழா சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றிவைத்து ஏழை எளியவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானங்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திரம் பெற்று சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாட்டின் தலைநகரில் தங்கநகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் கொள்ளை, கொலை நகரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் சட்டம்
ஒழுங்கு யார் கையில் இருந்தாலும் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு
அடக்கினார்கள். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. பத்திரிகை ஊடகங்களில் ஒரே நாளில் பல கொலைகள் நடப்பதாக செய்தி வெளியாகிறது. ஜெயலலிதா மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலங்களில் மழைநீர் சேகரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்றது, முறையாகத் தூர்வாரப்பட்டது. ஆனால், திமுக அரசில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை. மழை நீரைக் கூட சேகரிக்க முடியவில்லை. சென்னையில் மழை நீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. மழைக்கு முன்னரே அப்பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால், இந்த விடியா அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என விமர்சித்தார்.
பருவ மழையை எதிர்நோக்கி உள்ள சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள்
முடிக்கவில்லை. அதிமுகவில் டிடிவி தினகரன் சசிகலாவை சேர்ப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை. பத்தாயிரம் சதவீதம் இவர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த அவர்,
ஒரு விளையாட்டு போட்டி நடத்தினால் அதற்கான சொத்துக்களை உருவாக்க வேண்டும். 1991 – 96ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியின்போது சென்னையில்
நேரு விளையாட்டரங்கம் கோயம்பேடு விளையாட்டு கிராமம் மற்றும் வேளச்சேரி நீச்சல் குளம் உள்ளிட்ட விளையாட்டுக்கென சொத்துக்களை உருவாக்கினார்கள். ஆனால், தற்போதைய திமுக அரசு ஒலிம்பியாட் போட்டிக்கு வெறும் விளம்பரம் போட்டோ ஷூட் என பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
மகாபலிபுரத்தில் போட்டி நடைபெற்ற பத்து நாட்களுக்கு நட்சத்திர ஓட்டலுக்கு
மட்டும் 30 கோடி ரூபாய் வாடகை கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார். செஸ் ஒலிம்பியாட் நடத்தியதில் கலக்ஷன், கரப்ஷன், கமிஷன் நடந்திருக்கலாம், அது
குறித்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என கூறினார். தலை சரி இருந்தால் தான் வால் சரியாக இருக்கும் என்பதற்கு உதாரணம் கோயம்பேடு வணிக வளாகத்தை அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் உருவாக்கினார்கள். ஆனால், தற்போதைய அரசு முறையாக பராமரிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி தொலைபேசியைக் கூட எடுத்துப் பேசவில்லை என குற்றம்சாட்டினார்.
அதிமுக காலத்தில் கண்ணாடிபோல் இருந்த கோயம்பேடு சந்தை தற்போது கூழாங்கல் போல் உள்ளது என விமர்சித்தார். மேலும், நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் இருதரப்பினர் (பாஜக மற்றும் திமுக) மீதும் தவறு உள்ளது என தெரிவித்தார்.
-ம.பவித்ரா








