கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை- தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3- ந் தேதி…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3- ந் தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர். இதில் 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் இல்லாமல் கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.

மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ந்தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும். இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நிலவகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்லலாம்.

தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதையும் அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு கலெக்டர்கள் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.