”இளையராஜா எனும் நான்”- ராஜ்யசபாவில் ஒலித்த இசை ராஜாவின் குரல்

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கடவுளின் மீது ஆணையிட்டு கூறுவதாக தெரிவித்து பதவியேற்பு உறுதிமொழியை அவர் மேற்கொண்டார். இந்திய திரை இசை உலகின் ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும்…

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கடவுளின் மீது ஆணையிட்டு கூறுவதாக தெரிவித்து பதவியேற்பு உறுதிமொழியை அவர் மேற்கொண்டார்.

இந்திய திரை இசை உலகின் ஜாம்பவானாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வரும் இளையராஜா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை அமைத்த விஜயேந்திர பிரசாத், முன்னாள் தடகள வீராங்கனையும் இந்தியாவின் தங்க மங்கை என புகழப்பெற்றவருமான பி.டி.உஷா, தர்மசாலா கோயிலின் நிர்வாகியும் சமூக சேவகருமான வீரேந்திர ஹெக்டே ஆகியோர் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மத்திய பாஜக அரசின் பரிந்துரையின் பேரில் அவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமித்தார்.

மற்றவர்கள் பதவியேற்ற நிலையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்ததால் இளையராஜாவால் பதவியேற்க முடியாமல் இருந்தது. இந்நிலையில் மாநிலங்களவை எம்.பியாக இன்று பதவியேற்பதற்காக நேற்று டெல்லி சென்றடைந்த அவருக்கு பாஜகவினர் மற்றும் பல்வேறு தரப்பில் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மதியம் மாநிலங்களவை மீண்டும் கூடியதும் இளையராஜா எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்கும்போது கடவுளின் மீது ஆணையிட்டு கூறுவதாக தெரிவித்து உறுதி ஏற்றார். ”மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா என்னும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவுள்ள கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று தெரிவித்து இளையராஜா பதவியேற்றார். சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து எம்.பியாக தேர்தெடுக்கப்பட்ட திமுக எம்.பிக்கள் மூவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் ஆகியோர் பதவியேற்கும்போது விழுமிய முறைமையுடன் உறுதிகூறுகிறேன் எனத் தெரிவித்து பதவியேற்றனர்.  அதிமுக எம்.பியான சி.வி.சண்முகமும், நியமன எம்.பியான இளையராஜாவும் கடவுளின் மீது ஆணையிட்டு கூறுவதாக தெரிவித்து பதவியேற்பு உறுதியை ஏற்றுள்ளனர்,

இசைத்துறையில் எல்லைகளற்ற சாதனைகள் படைத்து எண்ணற்ற விருதுகளை  அடைந்த  இளையராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினர் என்கிற புதிய பயணத்தையும்  தொடங்கியுள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.