பதிப்புரிமை உத்தரவை மீறிய இளையராஜா – டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

பதிப்புரிமை உத்தரவை மீறியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக சரிகமா தொடுத்துள்ள பதிப்புரிமை வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 13ம் தேதியன்று, சரிகமா உரிமை கோரும் சில பதிப்புரிமை பெற்ற படைப்புகளுக்கு உரிமை கொண்டாடவோ, பயன்படுத்தவோ அல்லது பிறர் பயன்படுத்த உரிமம் வழங்கவோ, மூன்றாம் நபரிடம் உரிமை கோரவோக் கூடாது என இளையராஜாவுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த இடைக்காலத் தடையை நீக்குமாறு இளையராஜா தரப்பில் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்ந ஜூலை 1ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் சரிகமா வசம் உரிமம் உள்ள பாடல்கள் பயன்படுத்திய நிலையில் அவர்களிடம் அப்பாடல்களின் உரிமையைத் தமக்குரியது என்று இளையராஜா உரிமை கோரியுள்ளார்.

இதன் மூலம், இளையராஜா நீதிமன்றத் தடையை வெளிப்படையாக மீறியுள்ளார். மேலும், முரட்டுக் காளை’ என்ற தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற பாடலின் உரிமையைத் தமக்குரியது என்று கூறி, அதைப் பயன்படுத்துவதற்குத் தன்னிடம் உரிமம் அல்லது ஒப்புதல் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ‘பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா கடந்த மே 8ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது நீதிமன்றம் விதித்த தடைக்கு முரணானது.

மேலும், அதே பாடலின் மீதான பிரத்யேக உரிமையைத் தமக்குரியது என்று கூறி, ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா ஜூன் 23 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் ஆனால், டெல்லியில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் அல்லது அமலில் உள்ள நீதிமன்றத் தடை உத்தரவு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திடம் அவர் தெரிவிக்கவில்லை என்று சரிகாமா கூறியது.

இதனால், ஜூலை 6 அன்று ‘பியாண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அது குற்றம் சாட்டியது. டெல்லி வழக்கு நடவடிக்கைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அந்தத் தடை உத்தரவு நீக்கப்பட்டது என்று சரிகாமாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜா, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி குறிப்பிட்ட சில பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அவற்றுக்கு உரிமையைக் கோருவதாகவும் எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.

இந்த மீறலுக்காக இளையராஜாவை சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகமா நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி முன்பு விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக இளையராஜா பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.