காமராசர் ஆட்சி வர வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர
வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நாம் தமிழர் கட்சி ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்
என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ” ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற எனக்கு மனசு வரமாட்டேங்குது. பல்வேறு கவர்ச்சியான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு வாக்குகள் பெறலாம். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இலவசம் என்பது இல்லை. ஆனால் கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக தருவோம். அதிமுகவில் உள்ளவர்கள் அப்போலோவுக்கும் திமுகவில் உள்ளவர்கள் காவிரி மருத்துவமனைக்கும் செல்கிறார்கள் அப்படி என்றால் ஏன் அரசு மருத்துவமனைகளை கட்டி வைத்து உள்ளார்கள்.
அரசை நடத்துபவர்களின் குழந்தைகளே அரசு பள்ளியில் படிப்பதில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இல்லை என்றால் அவை தரமற்றது என ஒத்துக்
கொள்கிறார்களா? உலகின் மற்ற நாடுகளில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் தரமாக உள்ளது. இந்தியாவில் மட்டுமே அரசு நடத்தும் துறைகள் கேவலமாக உள்ளது.
எத்தனை வாக்குறுதிகளை இந்த ஆட்சியாளர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில்
ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றி இருக்கிறார்களா? வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் நாட்டில் வறுமை இருந்திருக்காது.
விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல. தமிழ் தான் தோற்கடித்தது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த பக்தவச்சலம் இந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டதால் தமிழ், காமராஜரை தோற்கடித்தது. தற்போது தமிழ் செத்து போய் விட்டது. ஏட்டிலே எங்கும் தமிழ் இல்லை. பயிற்று மொழி, பண்பாட்டு மொழி, வழிப்பாட்டு மொழி , என எதிலும் என் தாய் மொழி இல்லை, தமிழ் வளர வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். காமராசர் ஆட்சி வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்” என சீமான் தெரிவித்தார்.







