அமெரிக்க அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு பரிசு பொருட்களை வழங்கி பிரதமர் மோடி அன்பை பரிமாறிக்கொண்டார்
அமெரிக்காவில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் டைபன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கோட்டக் கேமராவை பரிசாக அளித்தார். ராபர்ட் ஃப்ரோஸ்டின் எழுதிய கவிதையின் முதல் பதிப்பை பிரதமர் மோடிக்கு ஜில் பைடன் பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து, ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி 7.5 கேரட் பச்சை வைரத்தை பரிசாக வழங்கினார். மேலும், அதிபர் பைடனுக்கு சந்தனப் பெட்டி மற்றும் 1937ஆம் ஆண்டு ஸ்ரீ புரோஹித் சுவாமியுடன் இணைந்து WB Yeats எழுதிய இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கி பிரதமர் மோடி அன்பை பரிமாறிக் கொண்டார்.
அதேபோல் அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி வழங்கிய சந்தனப் பெட்டியில் இடம்பெற்ற பரிசுப் பொருட்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்…
அதிபர் பைடனுக்கு வழங்கப்பட்ட சந்தனப்பெட்டி ராஜஸ்தானைச் சேர்ந்த தலைசிறந்த கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தன மரங்களால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டதாகவும், இந்த பெட்டியில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் உருவங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சந்தனப் பெட்டியில் இடம்பெற்றுள்ள வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் விளக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்த சந்தனப்பேழையில், 10 விதமான பரிசுப் பொருட்களும் சிறிய வெள்ளி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன.
அதில், பசு தானத்தை குறிக்கும் வகையில் வெள்ளி தேங்காய் வைக்கப்பட்டிருந்தன. நிலத் தானத்தை குறிக்கும் வகையில் சந்தனக் கட்டையும், எள் தானமாக தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட வெள்ளை எள்ளும் இடம்பெற்றிருந்தன. தங்கம் மற்றும் வெள்ளி தானமாக ராஜஸ்தான் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயம், 99.5 சதவீதம் தூய்மையான வெள்ளி நாணயமும் வைக்கப்பட்டிருந்தன. குஜராத்தில் இருந்து தானமாக பெறப்பட்ட உப்பு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. வஸ்திர தானமாக ஜார்க்கண்டிலில் இருந்து கையால் நெயப்பட்ட பட்டுத் துணியும் இடம்பெற்றிருந்தது.
மேலும், பஞ்சாப்பில் இருந்து பெறப்பட்ட நெய், உத்தரகாண்டில் இருந்து பெறப்பட்ட அரிசியும் வைக்கப்பட்டிருந்தன. மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்ட வெல்லம் என 10 பொருட்கள் அடங்கிய பரிசுப் பொருட்கள் சந்தனப் பெட்டியில் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










