பணமோசடி வழக்கு: ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு…!

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மோசடி பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்குக் கோரிய மனுவை அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்தது. குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட பண பலன்களைப் பெற்றுக்கொண்டு அவர் இப்போது வழக்கிலிருந்து தப்பிக்க முயல்வதாக குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் பணமோசடி வழக்கில் கூடுதல் அமர்வு நீதிபதி பிரசாந்த் சர்மா வழங்கியுள்ள இந்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் முதற்கட்டமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் பிரிவு 4-ன் கீழ் வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட மொத்தம் 17 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய  உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிங்கி இரானி உட்பட 17 பேரையும் வரும் ஜூன் 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில்  ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.