”சக்தி உள்ள தெய்வமா இருந்தா சிஎஸ்கே ஜெயிக்கணும் ஆத்தா..!” – வைரலாகும் ரசிகரின் வீடியோ!

சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை வெற்றி பெற்ற பின்னர், ரசிகர் ஒருவர் வெறித்தனமாக சாமிக்கு அருள் வந்தது போல் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள்…

சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை வெற்றி பெற்ற பின்னர், ரசிகர் ஒருவர் வெறித்தனமாக சாமிக்கு அருள் வந்தது போல் ஆடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாடும், டெவன் கான்வேயும் கைகோர்த்து நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினர். 26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ராயுடுவும் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

சென்னை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்த ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதிசெய்தார். இதன்மூலம் 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்துள்ளது.

இந்த போட்டியை தனது வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் ஐந்தாவது பாலில் ஜடேஜா சிக்சர் அடித்த உடன் உற்சாகமடைந்தார். பின்னர் கடைசி பந்து வீசப்பட்ட போது, அவர் டிவி முன்பு சென்று ”தாயே ஓம் சக்தி, இந்த ஒரு பால்ல ஜெயிக்கனும்மா.. பராசக்தி… ஓம் சக்தி….” என்று உணர்ச்சி பொங்க வேண்டினார். இறுதி பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்த உடன் உணர்ச்சி பெருக்கில் சாமிக்கு அருள் வந்தது போல் கத்தினார். இந்த ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.