பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம் – முன்னாள் பாகிஸ்தான் தூதரின் கருத்தால் சர்ச்சை…!

பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம் என்று பாகிஸ்தானின் முன்னாள் தூதர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டங்களை அமெரிக்கா தாக்கினால் எவ்வாறு பதிலடி கொடுக்கக்கூடும் என்பதை விவரித்தார்.

அப்போது பேசிய அவர், “பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டங்களை அமெரிக்கா அழிக்க முயற்சிப்பதாக வைத்துக்கொள்வோம். அது நடப்பதற்கான வாய்ப்பு குறைவுதான், ஆனாலும் அமெரிக்கா நம்மைத் தாக்க முயற்சிக்கிறது என்று கற்பனை செய்து கொள்வோம். பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், எந்த யோசனையும் இல்லாமல், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம்” என்று கூறினார்.

மேலும் அவர் “யாராவது நம்மைத் தவறாக நினைத்தால், பாகிஸ்தான் தான் விரும்பும் இடத்தில் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை, அது நடக்க நாங்கள் விரும்பவில்லை, இந்தியாவும் அதை விரும்பவில்லை.” என்றார்.

முன்னதாக, அப்துல் பாசித் 2014 முதல் 2017 வரையில் பாகிஸ்தானின் உயர் ஆணையராக டெல்லியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அப்துல் பாசித்தின் கருத்துக்கள் சைச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வரவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.