ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் முதலித்தில் தொடர்கிறார்.
இந்த சமீபத்திய தரவரிசையில், தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா தொடரின் 3 போட்டிகள் மற்றும் இங்கிலாந்து-நியூசிலாந்து தொடரின் 2 போட்டிகளின் செயல்திறன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் டெம்பா பவுமா தனது கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 2 அரை சதங்களை அடித்ததன் மூலம் முதல் 10 இடங்களுக்கு அருகில் உள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் (ஒரு இடம் முன்னேறி 4வது), டிராவிஸ் ஹெட் (ஆறு இடங்கள் முன்னேறி 20வது இடம்), மார்னஸ் லாபுஷாக்னே (24 இடங்கள் முன்னேறி 45வது இடம்) ஆகியோர் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளனர். கேஎல் ராகுல் (10 இடங்கள் முன்னேறி 37வது இடம் ) மற்றும் இஷான் கிஷான் (இரண்டு இடங்கள் முன்னேறி 22வது இடம் ) உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியல்:
நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார், ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா முதல் ஐந்து இடங்களுக்குள் (4வது இடம்) நுழைய முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆசியக் கோப்பையின் 2 போட்டிகளில் 9 விக்கெட்டுகளுடன் 5 இடங்கள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் 8 இடங்கள் முன்னேறி 21வது இடத்தையும், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (8 இடங்கள் முன்னேறி 27வது இடத்தையும்), ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (21 இடங்கள் முன்னேறி 56வது இடத்தையும்) அடைந்துள்ளனர். ஆல்ரவுண்டர் பட்டியலில் பாண்டியா 4 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்தார்.







