நான் மோடிக்கும் பயப்படமாட்டேன் ED-க்கும் பயப்படமாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது முகவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
”திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி இப்படி பல அணிகள் இருக்கின்றன. அதேபோல் அதிமுகவிலும் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, தீபா அணி, சசிகலா அணி, தீபா டிரைவர் அணி என பல்வேறு அணி இருக்கின்றன.
நம்முடைய இயக்கங்களுக்கு எல்லாம் மாவட்டத்திற்கு ஒரு கட்சி அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவில் மட்டும் தான் மாவட்டத்திற்கு 3 கட்சி அலுவலகங்கள் இருக்கும். எந்த பிரச்னைக்கு எந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என யாருக்கும் தெரியாது.
அதே போல் பாஜகவில் நிறைய அணிகள் இருக்கின்றன. தேர்தல் வரும் போது அந்த அணிகள் எல்லாம் களம் இறங்கி விடுவார்கள். அந்த அணிகளின் பெயர்களை எல்லாம் பார்த்தால் சிபிஐ அணி, ஈடி அணி, ஐ.டி அணி இந்த அணிகளை எல்லாம் களமிறக்கி விடுவார்கள்.
இப்பொழுது அவர்கள் களமிறக்கிவிட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அணிகள் இ.டி சிபிஐ 95% எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு மகாராஷ்டிராவில் பாஜக என்னென்ன கூத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக அதன் தலைவர்களில் ஒருவரான அஜித் பாவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்கு மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்கள் எல்லாம் தற்போது பாஜகவின் பக்கம் வந்து விட்டார்கள். பாஜகவின் பக்கம் வந்த பிறகு இவர்கள் எல்லாம் புனிதர்களாக ஆகிவிட்டனர். இப்போது அவர்கள் வீட்டில் எந்த சோதனையும் கிடையாது. ஆனால் நான் மோடிக்கும் பயப்படமாட்டேன், ED-க்கும் பயப்படமாட்டேன்”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.







