“இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன் என கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் (ஜூன்.13) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் டேவிட் வார்னர் கூறியது சர்ச்சையாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் ஏர் இந்தியா விமான ஊழியர் ஒருவர் கூறிய கருத்தை பகிர்ந்த வார்னர் தான் இனி ஏர் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஏர் இந்தியா ஊழியர், “இது நான் அடிக்கடி பயணிக்கும் ஒரு விமானம் எனவும், இந்த விமானம் பல வருடங்களாகப் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாகவும், இதுதொடர்பாக குழுவினர், விமானிகள், பொறியாளர்கள் என அனைவரும் உண்மையில் எப்போதும் பதிவு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர் எனவும், ஆனால் நிறுவனம் எந்த ஊழியர்களையும் இதுகுறித்து ஒரு பொதுவெளியில் பேச விடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கே இதுபோன்ற அனுபவம் இருந்ததாகவும், அந்த நெருக்கடியிலும் விமானத்தை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதைப் பகிர்ந்துள்ள டேவிட் வார்னர், “இது உண்மையாக இருந்தால் அது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் குடும்பங்களுக்கும் இது பற்றிய எண்ணங்கள் வருகின்றன. இந்திய விமான நிறுவனத்துடன் தொடர்ந்து பறக்கப் போவதில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

David Warner Slams Air India After Ahmedabad Plane Crash

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.