தலைமைக்கும், கழகத்துக்கும் விசுவாசமாக இருப்பேன் என எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானிய தொண்டன் எனவும், இந்த வரலாற்று வாய்ப்பினை தனக்கு வழங்கி இருக்கிறார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும் தலைமைக்கும், கழகத்துக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எவ்வாறு விசுவாசமாக பணியாற்றினோமோ அதேபோன்று பணியாற்றுவோம் எனக் கூறினார்.
மேலும், சாமானிய தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக இன்று தானும் இருப்பதாகக் கூறிய அவர், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை நோக்கத்தோடும், தெய்வ உள்ளத்தோடும் இந்த வரலாற்று வாய்ப்பினை தனக்கு வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘கள்ளக்குறிச்சி வன்முறை; கலெக்டர், எஸ்.பி அதிரடி மாற்றம்!’
தொடர்ந்து பேசிய அவர் திமுகவின் நிர்வாக குளறுபடிகளைத் தோல் உரித்துக் காட்டுகிற பணியினை கடந்த ஓராண்டுக் காலமாக எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செய்து வருவதாகவும் இனிவரும் காலங்களிலும் அவர் காட்டுகிற வழியில் பயணிக்க தனக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்குக் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கட்டும் என அவர் தெரிவித்தார்.








