உலகில் உள்ள அனைத்து உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம் என முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே வில்லிபத்திரி சிலம்பாட்டம் கலைக்குழு நடத்திய பாராட்டு
விழாவில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்மணி முத்தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார். அவருக்கு வில்லிபத்திரி சிலம்பாட்ட கலைக்குழுவினர் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டினர்.
பின்பு முத்தமிழ்ச்செல்வி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் என்பதில் பெருமையாக இருப்பதாகவும் அனைவரும் தங்களுக்குள் உள்ள திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் தமிழ்நாடுஅரசும் விளையாட்டு துறை அமைச்சரும் சாதனை புரிவதற்கு
உறுதுணையாக இருந்தார்.
உலகத்தில் உள்ள ஏழு கண்டங்களில் தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்திருக்கிறேன். மீதமுள்ள ஆறு கண்டங்களில் உள்ள அனைத்து உயரமான சிகரங்களிலும் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது லட்சியம்.
அடுத்த மாதம் ஐரோப்பாவிலுள்ள உயரமான சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளேன். ஏழு
கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை அடைந்து சாதனை படைத்து பின்னர், பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன். ஆண், பெண் இருவருமே சாதிக்கலாம். பெண்கள் திருமணத்திற்கு பின்பு சாதிக்க முடியாது என நினைக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால் பெண்களும் சாதிக்கலாம்,
பெண்கள் தங்கள் மனதில் உள்ள லட்சியங்களை வெளிப்படையாக பேச வேண்டும்” என அவர் முத்தமிழ்ச்செல்வி கேட்டுக்கொண்டார்.







