“மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்

நீங்கள் இன்னும் சிவசேனை கட்சியில்தான் இருக்கிறீர்கள்; மும்பை திரும்புகள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு…

நீங்கள் இன்னும் சிவசேனை கட்சியில்தான் இருக்கிறீர்கள்; மும்பை திரும்புகள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அனுப்பிய தகவலில் கூறியதாவது:
நான் எனது மனதில் இருந்து பேசுகிறேன். நீங்கள் இன்னமும் சிவசேனை கட்சியில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் கடந்த சில நாட்களாக ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நீங்கள் இன்னும் எங்களுடன் தொடர்பில் தான் இருக்கிறீர்கள். மும்பைக்கு திரும்புங்கள். பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் மேலும் 5 மாநில அமைச்சர்களும், 30-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களும் குஜராத் மாநிலம், சூரத் நகரில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். தற்போது அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்களாகும்.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனை கட்சியின் விசுவாசியாக இருந்தவர் ஆவார். இவர் இதுபோன்று ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி அடைந்தது சிவசேனை கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. சிவசேனை கட்சி இந்தக் கூட்டணியை உதறிவிட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டோ கோரிக்கை விடுத்து வருகிறார்.

முன்னதாக, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் அதிருப்தி எல்எல்ஏக்களை தகுதிநீக்கும் செய்யும் முயற்சியும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே, தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனாவின் அதிருப்தி பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.