கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு 2018 ஆம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான் மை கிடைக்காததால் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜக ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்தக் கூட்டணி ஆட்சி 14 மாதங்கள் நீடித்தது.
பின்னர் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் 2019-ம் ஆண்டு எடியூரப்பா 4-வது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
இந்நிலையில், 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதலமைச்சர் பதவியை, பாஜக வழங்கியது. அப்போது, 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கூறியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் பதவியேற்று இன்றுடன் 2 வருடம் நிறைவடைவதை ஒட்டி, அதற்கான விழா பெங்களூரில் நடத்தப்பட்டது. இந்த விழாவுடன் அவர் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
அதன்படி இன்று நடந்த விழாவில், தான் பதவி விலகுவதாக எடியூரப்பா அறிவித்தார். பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஏழு முறை தன்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு கண்ணீர் மல்க அவர் நன்றி தெரிவித்தார்.
மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த எடியூரப்பா, ஒரு முறை கூட ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








